திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை – கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

வேலூர்:

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க. பகுதி செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சீனிவாசன் வீட்டில் உள்ள அறைகள், வீட்டின் அருகே உள்ள பூட்டப்பட்ட கடை ஆகியவற்றில் சோதனை செய்தனர். அதே பகுதியில் சீனிவாசனின் அக்கா வீடு உள்ளது. இங்கும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சீனிவாசன் வீட்டில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. அதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.
வருமானவரி சோதனையில் சிக்கிய பண மூட்டைகள்

இந்த பணம் எப்படி வந்தது. மூட்டைகளில் பணத்தை கட்டி வைக்க என்ன காரணம் என்பது குறித்து வருமான வரி அதிகாரிகள் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்.

நேற்று முன்தினம் காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், ரூ.10 லட்சம் சிக்கியது.

காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளி உள்ளது. இங்கு நடந்த 12 மணி நேரம் நடந்த சோதனையில் கல்லூரி அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோல் துரைமுருகனுக்கு நெருக்கமான முன்னாள் மாவட்ட செயலாளர் வாணியம்பாடி தேவராஜ் வீட்டில் 2 மணி நேரம் சோதனை நடந்தது. இதில் ஆவணங்கள், பணம் கைப்பற்றப்படவில்லை.

குடியாத்தம் முன்னாள் தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் அவரது வீடு, கல்லூரி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை கண்டு தி.மு.க. அஞ்சாது நாங்கள் பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம் என்றார்.

இன்று காலை சோளிங்கரில் நடந்த கூட்டத்தில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. #ITRaid #DMK

Leave a comment