ஒரு அவதூறு வழக்கின் கதை -சவுக்கு இணையம்

சவுக்கு இணையதளத்துக்கும் நக்கீரன் காமராஜுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.   2009ம் ஆண்டு சவுக்கு இணையதளம் தொடங்கப்பட்டபோது சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.   பத்திரிக்கையாளர்கள் இழைக்கும் தவறுகள், அவர்களின் அரசியல் சாயங்கள் குறித்து எந்த ஊடகத்திலும் செய்தி வெளிவராது.  அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் நக்கீரன் காமராஜ் குறித்து சவுக்கு தளத்தில் விரிவாக செய்தி வெளியானது.   அந்த கட்டுரை சவுக்கு தளத்தை பத்திரிக்கையாளர்கள் இடையே அறிமுகப்படுத்தியது.   காமராஜ் குறித்து வெளியான கட்டுரையை அவருக்கு ஆதரவான பத்திரிக்கையாளர்கள் நம்பவில்லை.   உள்நோக்கத்தோடு பார்ப்பன சக்திகளின் தூண்டுதலில் பொய் எழுதப்பட்டது என்று செய்தி பரப்பினார்கள்.   ஆனால் காமராஜ் குறித்து தொடர்ந்து சவுக்கு தளத்தில் அம்பலப்படுத்தப்பட்டே வந்தது.   2010ம் ஆண்டு, 2ஜி ஊழல் தொடர்பாக நடந்த சோதனையில், காமராஜ் வீடு சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, சவுக்கு சொல்லிய செய்திகள் அனைத்தும் உண்மை என்று நிரூபணமானது.

????????????????????????????????????

அண்ணாமலை காமராஜ்.   ஒரு பத்திரிக்கையாளராக பரவலாக அறியப்பட்டாலும், 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் ஒரு குறுநில மன்னனாகவே செயல்பட்டார் காமராஜ்.   நக்கீரன் இதழை உருவாக்கியவர் கோபால் என்றாலும், நக்கீரனின் மூளையாக செயல்பட்டது காமராஜே.  அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளுமே காமராஜுக்கு நெருக்கம் என்றாலும், திமுகவோடு அவர் உறவு பிரிக்க முடியாதது.   திமுக அரசில் காமராஜ் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தார் என்றால், எந்த நேரம் வேண்டுமானாலும், முதலமைச்சர் கருணாநிதியின் அலுவலகத்திலோ, வீட்டிலோ நுழைய முடியும்.   முதலமைச்சர் வீட்டிலேயே நுழைய முடிகிறதென்றால், இதர அமைச்சர்களிடம் அவரது செல்வாக்கு குறித்து சொல்ல வேண்டியதில்லை.  ஒரு தொலைபேசி அழைப்பிலேயே திமுக அரசில் எந்த காரியத்தை வேண்டுமானாலும் செய்து முடிக்கக் கூடிய செல்வாக்கை காமராஜ் பெற்றிருந்தார்.

இவரது இந்த நெருக்கம் காரணமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், காமராஜ் கேட்டதையெல்லாம் செய்து முடித்தனர்.   திமுக அரசில் முடிசூடா மன்னனாக கருணாநிதியின் குடும்பத்தை கூட விடாமல் மிரட்டி அதிகாரம் செலுத்தியவர் அப்போதைய உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்.   இவரும் காமராஜுக்கு மிகவும் நெருக்கம் என்பதால், இவர்கள் இருவரும் 2006 முதல் 2011 வரை அடித்த கூத்துக்களை ஒரு புத்தகமாகவே, நக்கீரன் பதிப்பகம் மூலமாக வெளியிடலாம்.  உளவுத்துறையின் தலைவராக ஜாபர் சேட் இருந்ததால் ஜாபருக்கு பிடிக்காதவர்கள், ஜாபரின் அரசியல் எதிரிகள், காமராஜின் எதிரிகள் என்று ஒருவர் விடாமல் அவதூறு செய்து, செய்திகள் வெளியிட்டனர்.     2ஜி ஊழல் நாடெங்கும் பற்றி எரிகையில், நக்கீரன் மட்டும், 2ஜியில் ஊழலே நடைபெறவில்லை என்று தொடர்ந்து எழுதி வந்ததற்கு முழுக் காரணம், காமராஜ் மட்டுமே.   அதிமுக அரசு பதவியில் இருக்கையில், பின்னாளில் அரசியல் ப்ரோக்கராக மாறிய ராமானுஜத்தோடு நெருக்கமாக இருந்தார் காமராஜ்.  அந்த தொடர்புகளின் வழியாகத்தான், கடத்தல் மன்னன் வீரப்பன் குறித்த செய்திகளை நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டது.

ஷபீர் அகமது என்ற இளைஞர், நக்கீரன் நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு இளம் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர்.   காமராஜோடு ஒப்பிடுகையில் பணியில் மிகவும் இளையவர்.    அவரோடு காமராஜ் மோதல் போக்கை கடைபிடித்து, அவர் மீது வழக்கு தொடுத்து அவரை தொல்லைக்குள்ளாக்கியதன் பின்னணி என்ன ?    ஒரு சாதாரண இளம் பத்திரிக்கையாளரை ஒரு மூத்த பத்திரிக்கையாளரான காமராஜ் எதிரியாக கருதியதன் பின்கதை என்ன ?

2010ம் ஆண்டில் திமுக அரசில், அறிவாலயத்தில் பேப்பர் பொறுக்கியவன், கக்கூஸ் கழுவியவன், போன்றவர்களுக்கெல்லாம், அரசு கோட்டாவில், போன்றவர்களுக்கெல்லாம், அரசு கோட்டாவில், “சமூக சேவகர்” என்ற பெயரில் அரசு நிலங்களை சகாய விலைக்கு அள்ளிக் கொடுத்த விவகாரம் என்டிடிவி இந்து செய்தி சேனலில் வெளியாகியது.   ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல், அமைச்சர்களின் மனைவிகள், உதவியாளர்கள், என்று சகட்டு மேனிக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டிருந்தன.    இப்படி வீட்டு மனை வாங்கியதில் அம்பலப்பட்ட இருவர், நக்கீரன் காமராஜ் மற்றும் உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்.  இருவருமே தங்கள் மனைவிகளை சமூக சேவகர் என்று அடையாளப்படுத்தி வீட்டு மனை வாங்கியிருந்தனர்.   அந்த வீட்டு மனைகள் ஒரு சில வாரங்களிலேயே பெரும் கட்டுமான நிறுவனங்களிடம் விற்கப்பட்டன.   இந்த ஊழல் முதல் முதலாக சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

jaffer sait 2

என்டிடிவி செய்தி நிறுவனமும் இந்த ஊழல் குறித்து முழுமையான செய்தியை வெளியிட்டது.  அந்த செய்தியின் பின்னணியில் இருந்தவர் செய்தியாளர் ஷபீர்.     இரவு பகலாக கடுமையாக உழைத்து ஒரு சிறப்பான செய்தித் தொகுப்பை வெளியிட்டார்.    அப்படி செய்தி வெளியிடப்பட்டபோது, ஜாபர் சேட்டின் மனைவி வீட்டு மனை பெற்ற விவகாரம் குறித்து மட்டும் என்டிடிவி இந்துவில் செய்தி வெளியிடாமல் தடுத்தவர் அதன் ஆசிரியர் சஞ்சய் பின்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலகட்டத்தில் சாதிக் பாட்சா மற்றும் ஆ.ராசாவோடு இருந்த நெருக்கம் மற்றும் தொழில் தொடர்புகள் காரணமாக ஏற்கனவே காமராஜ் சிபிஐ வளையத்தில் இருந்தார்.   அதன் பின்னர் நடந்த சோதனைகள் அனைவரும் அறிந்ததே.

இதற்கெல்லாம் காரணம் என்று காமராஜ் கருதியது, ஷபீர் அகமது மற்றும் சிபிஐயில் அப்போது எஸ்பியாக இருந்த முருகன்.  2ஜி சோதனைகள் முழுக்க முழுக்க டெல்லி சிபிஐ அதிகாரிகளால் நடத்தப் பட்டது என்ற அடிப்படையைக் கூட காமராஜ் புரிந்து கொள்ளவில்லை.    சிபிஐ எஸ்.பி முருகன் மீது, நக்கீரன் கோபாலே தடுத்த பிறகு கூட, ஏராளமான பொய் செய்திகளை வெளியிட்டார் காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  பின்னாளில் முருகனுக்கு எதிராக  அவர் வெளியிட முயற்சித்த ஒரு செய்தியே, காமராஜ் நக்கீரனை விட்டு வெளியேற காரணமாக இருந்தது என்பது வரலாற்றுச் சுவடு.

ஷபீரை பழிவாங்க காமராஜ் கையில் எடுத்த ஆயுதம்தான் அவதூறு வழக்கு.    அந்த அவதூறு வழக்கு மற்றும் அதன் விளைவுகள் குறித்து, பத்திரிக்கையாளர் ஷபீர், விவரிக்கிறார்.

“அது 2010ம் ஆண்டு.  என்டிடிவி குழுமத்தால் அப்போது சென்னையில் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆங்கிலச் சேனலில் ஒரு இளம் நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.   டிசம்பர் 15, 201ம் அன்று, சிபிஐ இந்தியா முழுக்க 2ஜி ஊழல் தொடர்பாக பல்வேறு சோதனைகளை நடத்தியது.  அப்படி சோதனை நடத்திய இடங்களில் ஒன்று நக்கீரனில் இணை ஆசிரியராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த காமராஜின் வீடு.

திமுகவோடு காமராஜ் கொண்டிருந்த நெருக்கம் ஒன்றும் ரகசியமானதல்ல.   குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் இடையே அது வெளிப்படையானதொன்று.   காமராஜ் வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் இதர 2ஜி சோதனைகள் செய்தி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்பதால், தேசிய ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் இச்சோதனைகள் குறித்து செய்தி ஒளிபரப்பின.   சிபிஐயில் உள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி மற்ற செய்தி நிறுவனங்கள் போலவே நானும் சோதனைகள் குறித்த செய்திகளை எனது சேனலுக்காக வெளியிட்டேன்.

ஒரு பத்திரிக்கையாளனாக எனது வாழ்வு நக்கீரனில்தான் தொடங்கியது.   நான் அப்படி நக்கீரனின் பணியாற்றியபோது நடந்த சம்பவங்களை மனதில் வைத்திருப்பாரோ என்ன என்று தெரியவில்லை.    2ஜி சோதனைகள் நடந்த ஒரு சில நாட்களிலேயே நக்கீரன் காமராஜ், நான் அந்த சோதனைகள் குறித்து செய்தி வெளியிட்டு அவரை அவமானப்படுத்தியதாக நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தொடுத்தார். அவரது மனுவில் அவர் “ஷபீர் நக்கீரன் இணையதளத்தில் அக்டோபர் 2006 முதல் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.   அப்படி பணியாற்றுகையில் பல முறை என்னோடு (காமராஜோடு) அவர் உரையாடியுள்ளார். அப்போது நிகழ்ந்த சில சம்பவங்கள் காரணமாக அவர் என் மீது கோபத்தில் இருந்தார்.   பல முறை தனிப்பட்ட வன்மத்தை என் மீது வளர்த்து வந்தார்.   நக்கீரனை விட்டு அவர் வெளியேறிய பிறகு கூட அவருக்கு என் மீதான கோபம் தொடர்ந்து இருந்தது. இந்த உள்நோக்கத்தின் காரணமாக என்னை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தார்”

அந்த மனுவில் மேலும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.    “15.12.2010 அன்று என்டிடிவி இந்து சேனல் கீழ்கண்ட செய்தியை வெளியிட்டது.  “காமராஜ் ஆ.ராசா நடத்தும் ஒரு நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்.   காமராஜின் மனைவி ஜெயசுதா, நீரா ராடியா நடத்தும் மக்கள் தொடர்பு குழுமத்தின் சென்னை கிளையில் பணியாற்றி வந்தார்.

அந்த சேனலில் இவ்வழக்கின் மூன்றாவது குற்றவாளி ஷபீர் அகமது மாலை 7.30 மணிக்கு ஒரு நேரடி செய்தி வெளியிட்டார்.    சிபிஐ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்  மும்பையில் இயங்கி வரும் மாடர்ன் ஹைடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.   அவரது லேப்டாப் கைப்பற்றப்பட்டது”.

இந்த மான நஷ்ட வழக்கு என்டிடிவி இந்துவின் இணை ஆசிரியர் சஞ்சய் பின்டோ மூத்த ஆசிரியர் ராதிகா ஐயர் மற்றும் என் மீது தொடுக்கப்பட்டது. அந்த மனுவில் இந்த மூவரும் உள்நோக்கத்தோடு, தவறான, பொய்யான செய்தியை ஒளிபரப்பினர்  என்றும், இந்த செய்தியை அளித்த வகையில் நான் பொறுப்பானவன் என்றும் கூறப்பட்டிருந்தது.

காமராஜ் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தி கிடைத்ததுமே, என்டிடிவி இந்து அலுவலகமே பதறியது.  டெல்லியிலிருந்து விளக்கம் கேட்டு தொடர்ந்து ஈமெயில்கள் வந்தன.  நாங்கள் ஒளிபரப்பிய செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் ஒளிபரப்பியதற்கான ஆதாரங்களை எடுத்து, எங்கள் மீது மட்டுமே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினேன்.   சஞ்சய் பின்டோ, நீதிமன்றத்தில் ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கு நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

சில மாதங்களில் என்டிடிவி இந்து சேனலுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது.   என்டிடிவி சேனலே நிதி நெருக்கடியில் இருந்ததால், என்டிடிவி இந்து சேனலுக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மை பட்டவர்த்தனமாக தெரிந்தது.  என்னைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கும் எதிர்காலம் இல்லை என்பது புரிந்தது.   வேறு வழியின்றி, ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் பணிக்கு சேர்ந்தேன்.   சில மாதங்களில் என்டிடிவி இந்து செய்தி சேனல், தந்தி டிவிக்கு விற்கப்பபட்ட பிறகு மூடப்பட்டது.

வேறு வேலைக்கு செல்லப் போகிறேன் என்று நோட்டீஸ் கொடுத்து விட்டு தொடர்ந்து என்டிடிவி இந்துவில் பணியாற்றி வந்தேன்.  கடைசி நாள், என்னை சஞ்சய் பின்டோ தொலைபேசியில் அழைத்தார்.    “ஷபீர், உன்னுடைய வழக்கை நீதான் நடத்த வேண்டும்.   என்டிடிவி மேலிடம் இந்த முடிவை சொல்லச் சொன்னார்கள்.  உன்னுடைய புதிய நிர்வாகத்திடம் இந்த வழக்கை நடத்தச் சொல்லி கேட்டுப்பார்” என்று கூறினார்.

என்டிடிவி நிறுவனம், சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகாவின் வழக்கை நடத்துகையில், ஹெட்லைன்ஸ் டுடே எப்படி என் மீதான வழக்கை நடத்த சம்மதிப்பார்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.   என்டிடிவி நிறுவனம் என்னை கைகழுவ முடிவெடுத்து விட்டது என்ற உண்மை என் முகத்தில் அறைந்தது.  என் வழக்கை நானேதான் தனியாக நடத்த வேண்டும் என்பது புரிந்தது.

எனக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.    எந்த நிறுவனத்துக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றினேனோ, அந்த நிறுவனம் இப்படி திடீரென்று கைவிட்டது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.   என்டிடிவி இந்து நிறுவனம் இப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பது எனக்கு தெரியாது.  ஆனால் சக பத்திரிக்கையாளர்களால் நிர்கதியாக விடப்பட்ட எனக்கு நடந்தது ஒரு பெரும் அநீதி.

அந்த அதிர்ச்சி அதோடு நிற்கவில்லை.   சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மட்டும் ரத்து செய்து கொண்டனர்.    மிக மிக எளிதாக அந்த மனுவில் என்னுடைய பெயரை அவர்கள் சேர்த்திருக்கலாம்.    ஆனால் அப்படி செய்யவில்லை.    திடீரென்று சஞ்சய் பின்டோ என்னை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ப்ளாக் செய்தார்.    இப்படி அவர் ப்ளாக் செய்தது எந்தவிதமான காரணமும் இன்றி என்பது முக்கியமானது.    என்டிடிவியின் நிறுவனர் பிரணாய் ராய் அவர்களுக்கு அனைத்து விவகாரங்களையும் விளக்கி, நீண்டதொரு ஈமெயிலை அனுப்பினேன்.  ஆனால் அவரது கனத்த மவுனம் மட்டுமே இன்று வரை பதிலாக இருக்கிறது.

சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேபிகே வாசுகி தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “காமராஜ் வீட்டில் சோதனை நடந்ததும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதும் இங்கே யாராலும் மறுக்கப்படவில்லை.   இந்த செய்திகள் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் விரிவாக செய்தியாக பிரசுரிக்கப்பட்டன.    மூன்றாவது குற்றவாளி (ஷபீர்) சோதனை நடந்த இடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்து, அது என்டிடிவி இந்து சேனலில் ஒளிபரப்பாகியது.

ஆனால் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தியை ஒளிபரப்பியிருக்கையில் மூன்றாவது குற்றவாளி (ஷபீர்) மற்றும் காமராஜ் ஆகியோர் இடையே இருந்த தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக வழக்கு தொடுத்து, அதன் காரணமாக சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ராய் ஆகியோரையும் இந்த வழக்கில் சேர்த்து தொந்தரவு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.   எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறக் கூடாது என்பதால் அது ரத்து செய்யப்பட வேண்டும்.”

இந்த மனுவில் என்னுடைய பெயரையும் சேர்த்திருந்தால் என் மீதான வழக்கும் நிச்சயம் ரத்து செய்யப்பட்டிருக்கும்.   ஆனால் என்ன காரணத்தினாலோ நான் தனித்து விடப்பட்டேன்.    என் மீதான வழக்கை என்டிடிவி நிறுவனம் ஏன் நடத்தவில்லை என்பது குறித்து எனக்கு எந்தவிதமான விளக்கமும் எந்தத் தரப்பிலிருந்தும் வழங்கப்படவில்லை.

என்னுடைய நண்பர்களின் உதவியோடு, எழும்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சண்முகம் என்ற வழக்கறிஞரின் தொடர்பு கிடைத்தது.   நான் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தேன்.    சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை ரத்து செய்ய நான் எடுத்த முடிவுகள் பலன் தரவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு அவதூறு வழக்குகளில் ஆஜராகியுள்ள ரமேஷ் என்பவரின் அறிமுகம் நண்பர்கள் வழியாக கிடைத்தது.   ஏராளமான அவதூறு வழக்குகளை சந்தித்து வரும் விகடன் நிறுவனம் வழக்குகளை துணிச்சலாக எதிர்த்து சந்தித்து வருகிறதென்றால் அதற்கு காரணம் ரமேஷ்தான்.    ரமேஷ் உடனடியாக எனது வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்தார்.   பல ஆண்டு காலம், இரவு பகல் பாராமல் உழைத்த என்னுடைய என்டிடிவி நிறுவனம் என்னை கைவிட்ட நிலையில், எவ்வித கட்டணமும் பெறாமல் ரமேஷ் என் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்தது இன்று வரை எனக்கு வியப்பையே ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வழக்குகள் எப்போதுமே உங்கள் நேரத்தை விழுங்கும்.    ஆனால் நாங்கள் விடாமல் போராடினோம்.  மொத்தம் இரண்டு சாட்சிகள்.  தமிழக பிஜேபியின் சமூக ஊடக செயலாளர் சுப்ரமணிய பிரசாத் மற்றும் சாரதி சம்பந்தன் ஆகியோர் அந்த இருவர்.

சுப்ரமணிய பிரசாத் குறுக்கு விசாரணைக்கு வர மறுத்து விட்டார்.   மீதம் உள்ள சாட்சியான சாரதி, தனது குறுக்கு விசாரணையில், காமராஜ் மற்றும் அவர் மனைவி ஜெயசுதாவுக்கு 2ஜி ஊழலில் தொடர்பு உள்ளது என்று சாட்சியமளித்தார்.   இது வழக்கின் போக்கையே மாற்றியது.    இந்த சாட்சியத்துக்கு பிறகு, நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார். 24 ஜனவரி 2017 அன்று ஆறு ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு நான் விடுதலை செய்யப்பட்டேன்.

மொத்தம் 2555 நாட்கள்.   ஒரு சக பத்திரிக்கையாளரின் பழிவாங்கும் போக்கால் நான் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்த நாட்கள்.   நக்கீரன் பத்திரிக்கை அரசின் பல்வேறு அடக்குமுறைகளையும் நெருக்கடிகளையும் எதிர்த்து நீதிமன்றத்தில் போராடிய ஒரு குழுமம்.   அவதூறு வழக்குகளை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றுள்ளது.   எந்த சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுகிறார்களோ, அதே சட்டத்தை என் மீது பயன்படுத்தி என்னை அலைக்கழித்தனர் என்பதுதான் வேதனையான உண்மை.

பத்திரிக்கையாளர் ஷபீர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ்

ஒரு இளம் பத்திரிக்கையாளராக நான் நக்கீரன் காமராஜை கண்டு அவர் பணியாற்றுகையில் வியந்திருக்கிறேன்.     தமிழ் ஊடகத்திலிருந்து பத்திரிக்கையாளனாக என் வாழ்க்கையை தொடங்கிய எனக்கு என்டிடிவி இந்து முதல் ஆங்கில பணி.   இதன் காரணமாகத்தான் எனது இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்கிறேன்.    உங்களுடன் பணியாற்றும் ஒரு சக பத்திரிக்கையாளனால் நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்படுவதும், உங்கள் நிர்வாகம் உங்களை நிராதரவாக விடுவதும் கசப்பான உணர்வுகளேயை தரும்.

இந்தியாவைப் பொருத்தவரை, நீதிமன்ற நடைமுறைகள்தான் தண்டனை.     நீதிமன்றத்துக்கு ஒவ்வொரு நாளும் அலைவதுதான் தண்டனை.    என் வாழ்வின் ஆறு ஆண்டுகளை இந்த வழக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு என் மீது ஏற்படுத்திய தாக்கம் எளிதானது அல்ல.   எனது முதல் திருமண ஆண்டு நாளன்று நான் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டி நேர்ந்தது.  வர்தா புயல் காரணமாக வேறு இடத்துக்கு பணிக்கு சென்றேன்.   சென்னையிலோ வேறு ஏதாவது இடங்களிலோ ஏதாவது ஒரு முக்கிய செய்தி சேகரிக்கச் செல்லும் நெரத்தில் எனக்கு நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.   என்னுடைய நேரத்தையும் உழைப்பையும், நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் என்னுடைய வழக்கு அழைப்பதற்காக காத்திருந்து செலவிட்டுள்ளேன்.   அடுத்த தேதி என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே அந்த காத்திருப்பு.

என்னுடைய இந்த அலைக்கழிப்பு பத்திரிக்கை உலகில் சக்தி வாய்ந்த ஒருவரை எதிர்கொள்வதற்கான வலிமையை எனக்கு அளித்தது.  நான் எந்த குற்றமும் இழைக்கவில்லை.  ஒரு பத்திரிக்கையாளனாக எனது கடமையை செய்ததற்காக பழிவாங்கப்பட்டேன்.   இந்த வழக்கின் முடிவு எப்படிப் போகும் என்று எனக்கு கவலை இல்லை.  ஏனெனில் நான் எந்த நிறுவனத்துக்காக உழைத்தேனோ அந்த நிறுவனம் என் வழக்கை கைவிட்டதன் மூலமாக என்னை தண்டித்து விட்டதாகவே உணர்ந்தேன்.

இந்த நெருக்கடியான நேரத்தில் என்னோடு நின்று எனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.   இந்த வழக்கை சந்திக்கையில் எப்போதும் நான் தனியாக இருந்ததாக உணரவேயில்லை.  நண்பர்களின் ஆதரவு எனக்கு பெரும் வலிமையை தந்தது.

செவ்வாயன்று, இறுதித் தீர்ப்பை எதிர்ப்பார்த்து நான் காத்திருந்த அன்று, தீர்ப்பு எனக்கு எதிராக வரக் கூடும் என்பதையும் எதிர்ப்பார்த்து தயாராக இருந்தேன்.  எனது நண்பர் மற்றும் பத்திரிக்கையாளர் பாரதி தமிழனிடம் இதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியிருந்தேன்.  அவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற மேலாளர் ஜேக்கப் மற்றும் அரசு ஆகியோரை பிணையாக நிற்பதற்காக வரச் சொல்லியிருந்தார்.    காலை 10.30 மணி முதல் நாங்கள் அனைவரும் காத்திருந்தோம்.  காத்திருந்த நிமிடங்கள் வலியுடனேயே கழிந்தன.

நீதிமன்றத்தினுள் நான் அழைக்கப்பட்டதும் அரசு எனக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.   என்னுடைய சக பத்திரிக்கையாளர்களால் நான் கைவிடப்பட்டாலும், எனக்கு பல உயர்வான நட்புகள் கிடைத்தன.   “நான் உங்களை விடுதலை செய்கிறேன்” என்று நீதிபதி அறிவித்தபோது நிறைவாக இருந்தது.  தற்போது நான் மீண்டும் என் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப இயலும்.

எனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஏற்படுத்திய கோபம் இன்னும் தணியவில்லை.   ஊடகத்துறை குறித்து பக்கம் பக்கமாக பேசும் என்டிடிவி போன்ற ஒரு நிறுவனம், ரவீஷ் குமார் போன்ற பத்திரிககையாளர்களை வைத்திருப்பதை பெருமையாகக் கூறிக்கொள்ளும் ஒரு நிறுவனம், ஒரு நெருக்கடியான நேரத்தில் என்னை கைவிட்டது என்பதை இந்த இடத்தில் வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.    என்னுடைய விரிவான ஈமெயிலுக்கு பதில் அனுப்ப மறுத்த பிரணாய் ராய் என்ன விதமான ஊடக தர்மத்தை கடைபிடிக்கிறார் என்ற கேள்வியை தவிர்க்க இயலவில்லை.

அவதூறு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்ற நக்கீரன் போன்ற இதழ் எனக்கு எதிரான அவதூறு வழக்குக்கு துணை நின்றது இரட்டை வேடமா இல்லையா ?    இதுதான் அவர்களின் ஊடக தர்மமா ?

இறுதியாக என்னை நிராதரவாக கைவிட்டதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.    இல்லையென்றால், தன்னந்தனியாக நின்று ஒரு வழக்கை எப்படி எதிர்கொண்டு சந்திப்பது என்பதை தெரிந்து கொள்ளாமலே போயிருப்பேன். எத்தகைய இடர்களையும் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும், நம்பியவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது, என்பனவற்றை இவர்ளால்தான் கற்றுக் கொண்டேன்.”

என்டிடிவி நிறுவனம் ஏன் ஷபீரை கைவிட்டது என்பதை விசாரித்தபோது பல்வேறு சுவையான தகவல்கள் வெளிவந்தன.

சஞ்சய் பின்டோ, ராதிகா ஐயர் மற்றும் ஷபீர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பதை அறிந்துமே, சஞ்சய் பின்டோ, பயத்தில் கதறினார்.    பதறினார்.   எப்படியாவது காமராஜின் காலில் விழுந்து வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்பதற்கு பகீரத பிரயத்தனங்களை செய்தார்.   திமுகவின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காமராஜிடம் பேசுமாறு கூறினார்.   சஞ்சய் பின்டோவின் கல்லூரித் தோழரான தயாநிதி மாறன், மற்றும் பல்வேறு பிரமுகர்களிடம் கெஞ்சினார்.  இறுதியாக காமராஜை காப்பாற்ற ஜாபர் சேட் முன்வந்தார்.    சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயரை கழற்றி விட்டு விடுங்கள்.   ஷபீருக்கு ஒரு பாடத்தை புகட்டுவோம் என்று ஜாபர் பஞ்சாயத்து செய்ததன் அடிப்படையில், என்டிடிவி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  அவர்கள் இருவர் மீதான வழக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சஞ்சய் பின்டோ

ஒரு வளர்ந்து வரும் இளம் பத்திரிக்கையாளரை சிக்கலில் மாட்டி விட்டு, தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற ஒரு நிலைப்பாட்டை மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு எடுத்தார் சஞ்சய் பின்டோ.    இத்தனைக்கும் இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.   ஊடக தர்மம், மக்கள் உரிமை, ஜனநாயகம் ஆகியவை குறித்து பெரிய XXXXXX போல, இப்போதும் டெக்கான் க்ரானிக்கிள் போன்ற நாளிதழ்களில் சஞ்சய் பின்டோவின் கட்டுரை வெளிவரும்.   இப்படிப்பட்ட பசுத்தோல் போற்றிய பரதேசிகள்தான் ஊடகங்கள் மூலமாக நமக்கு உபதேசம் செய்கின்றனர். சஞ்சய் பின்டோ குறித்த ஒரு கட்டுரை இணைப்பு  சென்னை உயர்நீதிமன்றம் சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான வழக்கை ரத்து செய்ததற்கு எதிராக இன்று வரை, காமராஜ் மேல் முறையீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரனின் நிலைபாடு என்ன ?

தொடக்கத்தில் காமராஜுக்கு நக்கீரன் நிறுவனம் ஆதரவாகவே இருந்தது.  காமராஜ் வீட்டில் 2ஜி தொடர்பாக நடந்த சோதனைகளை ஊடக சுதந்திரத்துக்கு வந்த சோதனை என்றே நக்கீரன் வர்ணித்தது.   ஆனால் ஒரு கட்டத்தில் நக்கீரனின் வழக்கறிஞர் பெருமாள் அவதூறு வழக்குகள் தொடர்பான நக்கீரனின் நிலைபாட்டுக்கு இது எதிரானது என்றும் வழக்கை தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.   கோபாலே பேசியபோதும், காமராஜ் வழக்கை வாபஸ் வாங்க மறுத்தார்.    இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறி விட்டார்.   காமராஜ் நக்கீரனை விட்டு வெளியேறிய பின்னர்தான், கோபால் தன்னுடைய நிலைபாட்டை தெளிவாக்கினார்.

வழக்கு தொடுத்தாலும், காமராஜ் நீதிமன்றத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார்.    வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு காமராஜ் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.   பல்வேறு அவதூறு வழக்குகளை கையாண்ட அனுபவம் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் குறுக்கு விசாரணையின்போது காமராஜை துளைத்து எடுத்தார்.  பதில் சொல்ல முடியாமல் காமராஜ் திணறினார்.    ஒரு கட்டத்தில் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று கேட்டு, தண்ணீர் குடித்தார்.     தான் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதன் மேலாண் இயக்குநராக இருந்ததாகவும், சிபிஐ சோதனைகளுக்கு 15 நாட்களுக்கு முன்பாக அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ததாகவும், விசாரணையில் காமராஜ் தெரிவித்தார்.    சிபிஐ சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்னும் சிபிஐ வசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படி விசாரணையில் திணறினாலும், அவரது நேரத்தை இந்த வழக்கு ஆக்ரமித்துக் கொண்டாலும், காமராஜ் ஒரு வாய்தா தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகை தந்து இந்த வழக்கை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.   ஆனால் பொய் மட்டுமே நிரந்தரமாக வென்று விடுமா என்ன ?   உண்மை இறுதியாக வென்றது.

ஒரு சாதாரண பத்திரிக்கையாளராக, பெரம்பலூரில் இருந்து சென்னை வந்து வாழ்கைகையை தொடங்கிய காமராஜால் இன்று மூன்று கோடி ரூபாய் முதலீட்டில் அண்ணாமலை கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, மின்னம்பலம் பெயரை விலைக்கு வாங்கி இணையதளத்தை நடத்தி வருகிறார் என்றால் அது அவரது நேர்மையால் அல்ல.

ஒரு மனிதன் அவன் பத்திரிக்கையாளனாக இருந்தாலும் அவதூறால் பாதிக்கப்பட்டால் மான நஷ்டம் கேட்டு வழக்கு தொடர எல்லா உரிமையும் அவனுக்கு உண்டு.  ஆனால் மனைவியின் பெயரில் சமூக சேவகர் சான்றிதழ் வாங்கி, இரண்டு கோடி ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை திருவான்மியூரில் ஒரு கோடி ரூபாய்க்கு பெற்று, அதை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்த காமராஜுக்கு உண்மையில் மானம் இருக்கிறதா என்ன ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s