“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’-சவுக்கு இணையம் சுழற்றும் சவுக்கு..

அன்பார்ந்த திரு கோபால் அவர்களே

இந்த கடிதத்தை உங்களுக்கும் காமராஜுக்கும் சேர்த்தே எழுதலாம் என்றுதான் முதலில் தோன்றியது.  நீங்கள் உழைப்பால் இந்தப் பத்திரிக்கையை வளர்த்தீர்கள்.  வலம்புரி ஜானின் உதவியாளராக உங்கள் வாழ்க்கையை தொடங்கி இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள்.   ஆனால் உங்கள் தளபதி காமராஜ் ஒரு ஆண் நீரா ராடியாவாக இன்று உருவெடுத்திருக்கிறார்.  அவரை எந்த வகையிலும் ஒரு பத்திரிக்கையாளராக ஒப்புக் கொள்ள முடியாது என்ற காரணத்தாலேயே, இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் எழுதப் படுகிறது.

 

Gopal_Nakkeeranநக்கீரன் பத்திரிக்கை இன்று ஒரு அசாதாரணமான நெருக்கடியில் உள்ளது.  நெருக்கடி நக்கீரன் பத்திரிக்கைக்கு புதிதல்ல என்றாலும், இது ஒரு அசாதாரணமான நெருக்கடி.

மற்ற பத்திரிக்கைகளை விட, நக்கீரனுக்கு ஒரு தனி இடம் உண்டு.  பெரும்பாலான பாரம்பரிய ஊடகங்கள் பார்ப்பன தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் சூழலில், நக்கீரன் இதழ் தொடங்கப் பட்டு, பெரிய பின்புலம் இல்லாமல் உருவாகியது.  நக்கீரன் இதழ் தொடங்கப் பட்ட போது, இது இன்னும் ஆறு மாதமோ, அல்லது ஒரு வருடமோ என்று ஆருடம் கூறியவர்கள் பலர்.  ஆனாலும் நக்கீரனின் வளர்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது, நக்கீரன் மீது தொடுக்கப் பட்ட ஒடுக்குமுறைதான்.    1991 அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, 2001 அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, நக்கீரனை அதிமுக ஆட்சி படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

1991 ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக நக்கீரன் இதழ் வெளிக் கொண்டு வந்த பல்வேறு ஊழல் குறித்த செய்திகளும், அதிமுக அரசின் அடக்குமுறைகள் குறித்த செய்திகளும், பொதுமக்கள் மத்தியில் நக்கீரனுக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது.  1996ல் திமுக ஆட்சி வந்ததும், உங்களுக்கு மிகுந்த நற்பெயரும், கருணாநிதியின் நெருக்கமும் கிடைத்தது.  ஆனாலும் கூட, 1996-2001 திமுக ஆட்சியையும் நீங்கள் விமர்சித்தே வந்தீர்கள்.  இப்போது அடிப்பது போல அப்போது ஜால்ரா அடிக்கவில்லை.  ஆனால், திமுக ஆட்சியை விமர்சிப்பதை விட, ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை வெளியிடுவதிலேயே நீங்கள் மிகுந்த அக்கறை செலுத்தினீர்கள்.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் அடைந்த வேதனைகள் சொல்லி மாளாது.   11 ஏப்ரல் 2003ல் உங்களை ஜெயலலிதா அரசு, போடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சத்தியமங்கலம் காவல்துறையினர் உங்களை கைது செய்து உங்களை சோதனையிட்டதில், நீங்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், தமிழ்நாடு விடுதலைப் படையின் துண்டுப் பிரசுரத்தை வைத்திருந்ததாகவும், உங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.   கீழ் நீதிமன்றத்தில் உங்கள் ஜாமீன் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், ஆறு மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணையின் போது, ஜெயலலிதா அரசு உங்கள் மீது பொய்யாக வழக்கு புனைந்தது அம்பலமானது.

உங்களை கைது செய்ததாக நக்கீரன் இதழ் அலுவலக மேலாளருக்கு தந்தி அனுப்பிய ஆய்வாளர்,  “லைசென்ஸ் இல்லாத ஒரு ரிவால்வரை வைத்திருந்தார்” என்று தெரிவித்திருந்தார்.  அதன் பிறகு, தாக்கல் செய்யப் பட்ட எப்ஐஆரில்  “கோபாலை சோதனையிட்ட போது ”ஒரு கன்ட்ரி மேட் பிஸ்டல், குண்டுகள் மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்தார்” என்று இருந்தது. 12 ஏப்ரல் 2003 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த டிஎஸ்பி, ”ஒரு நாட்டுத் துப்பாக்கி, 410 மஸ்கட் குண்டுகள் இரண்டு மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்தார்” என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

ஒரே சம்பவத்தில் மூன்று வெவ்வேறு ஆயுதங்கள்  கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதிலிருந்தே, இந்த வழக்கின் உண்மைத் தன்மை விளங்குகிறது, அதனால் நக்கீரன் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு, உச்சநீதிமன்றம் சென்று, உங்கள் ஜாமீனை ரத்து செய்தது. அதன் பிறகு நீங்களும், நக்கீரன் பத்திரிக்கையும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அடைந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  அத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும், நீங்கள் தொடர்ந்து பத்திரிக்கையை நடத்தினீர்கள்.

அப்போது ஜெயலலிதா அரசு உங்கள் மீதும், நக்கீரன் மீதும் தொடுத்த அடக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமும் ஒன்றுபட்டு குரல் கொடுத்ததை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள். எழுத்தாளர் சுஜாதா கூட தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் உங்கள் கைதைக் கண்டித்து எழுதியிருந்ததாக நினைவு.

ஆனால், இன்று நீங்களும், நக்கீரனும் தனிமைப் பட்டு நிற்கிறீர்கள்.  உங்கள் மீது, அரசின் துணையோடு, வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை நேரடியாக பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் கூட, வெளிப்படையாக கண்டிக்க முன்வர மறுக்கிறார்கள். சம்பவம் நடந்த அன்று ஒரு பத்திரிக்கையாளர் சவுக்கிடம் சொன்னது.  “எந்த ஒரு பத்திரிக்கை அலுவலகம் இப்படித் தாக்கப் படுதை நான் நேரில் பார்த்திருந்தாலும் என் ரத்தம் கொதித்திருக்கும்.  ஆனால் இன்று வாய்மூடி மவுனமாக இருக்கிறேன்.  இந்த நிலைமை மிகுந்த வேதனையை அளிக்கிறது. இப்படி ஒரு நிலைமை வருவதற்கு கோபாலும், காமராஜுமே காரணம்” என்றார்.  இந்தப் பத்திரிக்கையாளர் சொன்னதுதான் அனைவரது நிலையும்.

நீங்கள் இன்று அந்நியப்பட்டு நிற்பதற்கு காரணம், ஜெயலலிதாவைப் பற்றி நீங்கள் வெளியிட்ட செய்தி மட்டுமல்ல.  2006 முதல் 2011 வரையிலான உங்கள் நடவடிக்கைகளே.  2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்கீரனின் நடவடிக்கைகளை நீங்களே பரிசீலித்துப் பாருங்கள்.    ஜெயலலிதா உங்கள் மீது எடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளினால் உங்களுக்கு கோபம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை.  அதற்காக, திமுக ஆட்சியின் அராஜகங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவற்றை ஆதரித்தல்லவா எழுதினீர்கள் ?

திமுக ஆட்சியில் கருணாநிதி பத்திரிக்கையாளர்களை படுத்திய பாடு கொஞ்சமான நஞ்சமா ?

ஜாபர் சேட்டை வைத்து பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகட்டும், அழகிரிக்கு எதிராக செய்தி வெளியிட்ட தினபூமி நாளிதழின் ஆசிரியரையும் அவர் மகனையும் கைது செய்ததாகட்டும், சீமான் கைது செய்யப் பட்ட போது பேட்டியெடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை அடக்கி ஒடுக்கியதாகட்டும், பெரும்பாலான ஊடகங்களை விளம்பரம் தர மாட்டேன் என்று மிரட்டியதாகட்டும், இத்தனையையும் நீங்கள் வாய் மூடி மவுனமாக ஆதரித்துக் கொண்டல்லவா இருந்தீர்கள் ?

இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று கதறும் நீங்கள், கடந்த திமுக ஆட்சியில் நெற்றிக்கண் மணியை ஜாங்கிட் படாத பாடு படுத்திய போது என்ன செய்தீர்கள் ?   மற்ற விவகாரங்கள் தொடர்பாக கருணாநிதியை அப்போது சந்தித்த பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் நெற்றிக்கண் மணி விவகாரத்தை குறிப்பிட்ட போது, “அவன் அப்படி எழுதுவது மட்டும் சரியா ?” என்று கேட்டார் கருணாநிதி.   கருணாநிதியின் கண்ணசைவோடுதான், ஜாங்கிட், நெற்றிக்கண் மணியின் குடும்பத்தையே பழிவாங்கினார்.  அப்போது எங்கே போனீர்கள் கோபால் ?

உங்களோடு இருக்கும் காமராஜ் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினார் ? ஜாபர் சேட்டோடு அவர் செய்த தில்லுமுல்லுகள் அனைத்தையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள் ?  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா சிக்கிய போது, அவரை ஆதரித்து நீங்கள் என்னவெல்லாம் எழுதினீர்கள் என்று நினைத்துப் பாருங்கள் கோபால் அவர்களே…. எவ்வளவோ முயன்றும், உங்களால் கடைசி வரை ராசாவை காப்பாற்ற முடியவில்லையே….   இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று குரல் கொடுக்கிறீர்களே….  உங்கள் தளபதி காமராஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்ட போது, காமராஜின் மனைவி ஜெயசுதா நீரா ராடியாவின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றுகிறார் என்று என்டிடிவி இந்துவில் ஒரு செய்தி வெளியாகியது.  அந்தச் செய்தியை, என்டிடிவி இந்து தவிர்த்து, தேசிய நாளிதழ்கள் உட்பட பல்வேறு இதழ்களும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.  ஆனால், என்டிடிவி இந்துவில் பணியாற்றும் ஒரு இளம் பத்திரிக்கையாளரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே காமராஜ் அவதூறு வழக்கு தொடர்ந்தாரே…. இன்று பத்திரிகை சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள் அந்தக் காரியத்தை தடுத்தீர்களா ?  எப்படி அதை அனுமதித்தீர்கள்.

பத்திரிக்கையாளர்கள் ஊழலை வெளிக் கொணர வேண்டும். ஆனால் பத்திரிக்கையாளரே மத்திய மந்திரியோடு ஊழலில் ஈடுபட்டு, அந்த மத்திய மந்திரியைப் பாதுகாப்பதற்காகவே செய்திகளை வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா கோபால் அவர்களே… உங்கள் தளபதி காமராஜ் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல கோடி ரூபாயை சுருட்டியிருப்பதை மறைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கட்டுரைகள் எழுதி கவர்ஸ்டோரியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் ? மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராசா சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, மக்கள் பெருமளவில் திரண்டு அவருக்கு ஆதரவு அளித்தார்கள், தலித்துகளுக்கு எதிரான பார்ப்பன அரசியலின் பலிகடா ஆ.ராசா என்று செய்தி வெளியிட்டது எந்த ஊடக தர்மம் ?

போலிப் பாதிரியை வைத்து ஈழப் போராட்டத்தில் என்னென்ன துரோகங்கள் செய்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் கோபால்.    கேணல் ராம் என்பவரோடு பேட்டி என்று நீங்கள் வெளியிட்ட செய்தி எத்தனை மோசடி என்பது உங்களுக்குத் தெரியாதா ?

நக்கீரன் பத்திரிக்கை வளர்ந்ததே அதிமுக ஆட்சியில்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.   ஜெயலலிதாவின்  தனிப்பட்ட பழிவாங்கும் போக்கால், நக்கீரன் மீது தொடுத்த நடவடிக்கைகள், அப்பத்திரிக்கையை உரம் போட்டு வளர்கவே செய்தன.   ஆனால் அப்படி உரம் போட்டு வளர்ந்த நக்கீரன் பத்திரிக்கை 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், தன் வேர்களை இழந்தது என்றால் அது மிகையாகாது.

கருணாநிதி என்ன நினைக்கிறாரோ அதுவே நக்கீரனில் செய்தியானது.  ஜாபர் சேட் மனதில் தோன்றுபவையே கவர் ஸ்டோரிகளாகின.   பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கும் நக்கீரன் பயன்படுத்தப் பட்டது.    ஒவ்வொரு தேர்தலின் போதும், நக்கீரன் வெளியிடும் சர்வேக்களை மக்கள் ஆர்வமாக வாங்கிப் படிப்பது வழக்கம்.  ஆனால், அந்த நம்பிக்கையை சட்டமன்றத் தேர்தலின் போது நக்கீரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பொய்யாக்கியது. ஊர் உலகமே, அதிமுக கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று எழுதிக்  கொண்டிருந்த போது, நக்கீரன் மட்டும், பிரத்யேக சர்வே என்று திமுக கூட்டணிக்கு 120 இடங்களை வாரி வழங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று காலை கூட, நீங்கள் கலைஞர் டிவியில் அமர்ந்து கொண்டு, திமுக கூட்டணி பெருவாரியான வெற்றி பெறும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தீர்கள். இவையெல்லாம் உங்கள்  மீதும், உங்கள் பத்திரிக்கை மீதும் நம்பிக்கையை குறைத்தன.

உங்கள் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய போது நீங்கள் வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நக்கீரன் எத்தனையோ சோதனைகளை தாங்கியிருக்கிறது.  இதையும் தாங்கும்” என்றீர்கள்.   பத்திரிக்கை சுதந்திரத்துக்காக பிரச்சினைகளை சந்திப்பதும், ஊழலில் ஈடுபட்டு பிரச்சினைகளை சந்திப்பதும் ஒன்றா ?  சமீபத்தில் நடந்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள்.   ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன ?  இது தமிழக மக்களின் வாழ்வை பாதிக்கும் அதிமுக்கிய பிரச்சினையா ?  மேலும், உங்கள் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ?

இன்றைய தினமணி தலையங்கத்தை எடுத்தாளுவது பொருத்தமாக இருக்கும்.

“அரசின் கொள்கை முடிவுகளை, செயல்திட்டங்களை, முறைகேடான நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக, விமர்சனம் செய்வதற்காக, இடித்துரைப்பதற்காகச் சுதந்திரம் பயன்படுத்தப்படும்போது அது அரசியல் சட்டத்தின் ஆதார சுருதியைச் சார்ந்ததாக இருக்கும். அதே சுதந்திரத்தை இழிவான முறையில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடப் பயன்படுத்தும்போது அதைவிடக் கீழ்த்தரமான கயமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

அரசியல்வாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, நீதித்துறையினருக்கு இல்லாத கடமையுணர்வும் பொறுப்புணர்வும் பத்திரிகையாளர்களுக்கு உண்டு. இவர்கள் சிந்தனாவாதிகள். சமுதாயம் இவர்களை வழிகாட்டிகளாகப் பார்க்கிறது. மேலே சொன்ன மூன்று பிரிவினரின் முடிவுகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி வழிநடத்தும் பொறுப்பைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்டவர்கள் இவர்கள். அதனால்தான் “படித்தவன் தவறு செய்தால் அய்யோ அய்யோவென்று போவான்’ என்று மகாகவி பாரதி சொன்னார்.

இறந்துபோன இருவரிடம் காலம்சென்ற ஒருவர் எப்போதோ சொன்னதாக ஓர் ஆதாரமற்ற அவதூறுச் செய்தியை அட்டைப்படச் செய்தியாக்கித் தனது பத்திரிகை விற்பனையை அதிகரித்துக்கொள்ள நினைப்பது என்பதே தவறு. அதைவிடப் பெரிய தவறு, பொறுப்பான பதவியில் இருப்பவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி அவரது பெயருக்குக் களங்கம் கற்பிக்க விரும்புவது. இப்படிச் செய்பவர்களைப் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக்கொள்வதே அவமானம்.

“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’ என்று ஏனைய பிரிவினர் கேட்கிறார்களோ இல்லையோ நிச்சயமாகப் பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதுபோன்ற பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் தனிமைப்படுத்தி அகற்றி நிறுத்த வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.”

இன்று மற்ற பத்திரிக்கையாளர்களின் ஆதரவு கூட இல்லாமல், நீங்கள் தனிமைப் பட்டுப் போயிருப்பதற்கு இதுதான் காரணம் கோபால் அவர்களே. இந்த அட்டைப்படச் செய்தி, பத்திரிக்கை விற்பனையை அதிகரிப்பதற்கான மலிவான வியாபாரத் தந்திரம் என்பதை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் காமராஜின் செயல்பாடுகளால் நக்கீரன் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு, இன்னும் தீரவில்லை. பெரும் செல்வந்தராக உருவாகியுள்ள காமராஜ் இந்த அட்டைப்படச் செய்தியின் பின்னணியில் உள்ளார் என்பது பத்திரிக்கை உலகில் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இத்தகைய சூழலில், உங்களுக்காக யார் போராட்டம் நடத்த முன்வருவார்கள்.

இருப்பதிலேயே மிகுந்த வேதனையை அளிக்கும், மோசமான சூழல் எது தெரியுமா ?    நல்லவர்களின் ஆதரவை இழந்து நிராதரவாக நிற்பதுதான்.    உங்களுக்கு திமுக தலைவரும், அவரின் தொண்டர் அடிப்பொடிகளும் ஆதரவாக குரல் கொடுக்கலாம்.  ஆனால் நல்ல பத்திரிக்கையாளர்கள் குரல் கொடுக்க வர மாட்டார்கள்.

பத்திரிக்கையின் விற்பனை சரிவடைந்து விட்டது என்பதற்காக விற்பனையை தூக்கி நிறுத்த அட்டைப் படத்தில் செக்ஸ் செய்திகளும், அவதூறு செய்திகளும் வெளியிடுவது வேசித்தனம். சவுக்கு தளம் இலவசமாக நடத்தப் படுவது.  இத்தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் எவ்வித கட்டணமும் செலுத்துவதில்லை.  ஆனாலும், சவுக்கு தளத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறது சவுக்கு.  இலவசமாகத்தானே தருகிறோம் என்று இஷ்டத்திற்கு பொய்யையும் புனைவையில் எழுதினால், ஒரே நாளில் சவுக்கு தனது வாசகர்களின் நம்பிக்கையை இழந்து விடும். ஒரு முறை நம்பிக்கையை இழந்தால், மீண்டும் அந்த நம்பிக்கையை பெறவே முடியாது.   ஒரு இலவச தளத்திற்கே இப்படி கவனமாக இருக்கும் போது, 10 ரூபாய் கொடுத்து உங்கள் புத்தகத்தை வாங்கும் வாசகனிடம் பொய்யைத் திணிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

ஜெயலலிதா குறித்த கவர் ஸ்டோரி வெளிவந்த பிறகு இன்று நக்கீரன் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது.  நல்லவர்கள் நக்கீரனைக் கண்டு இன்று அறுவெறுப்படைந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை.   இது நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம், கோபால் அவர்களே..  செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன்

சவுக்கு

-Thanks சவுக்கு…..

One thought on ““சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’-சவுக்கு இணையம் சுழற்றும் சவுக்கு..

  1. Pingback: “சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’-சவுக்கு இணையம் சுழற்றும் சவுக்கு.. | THADAISEY

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s