————————————————————————-
ரஞ்சிதா.. பாரதிராஜாவின் அறிமுகத்தில் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ரஞ்சிதா அறிமுகமான புதிதில் எப்படி பரபரப்பை ஏற்படுத்தினாரோ, அதை விட பரபரப்பு ஏற்பட்டது, நித்யானந்தாவோடு இருந்ததாக கூறப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பான போது.
பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்திருந்த ரஞ்சிதாவை சவுக்கு சார்பாக சந்தித்தோம். சவுக்கில், ரஞ்சிதாவுக்கு நடந்த அநியாயங்களை கண்டித்து எழுதியிருந்ததை படித்திருந்த ரஞ்சிதா,
சவுக்குக்கு பேட்டி என்றதும், உடனே ஒப்புக் கொண்டார். ஆட்சி மாறியவுடன், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரஞ்சிதா தான் பட்ட வேதனைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சன் டிவியிலும், நக்கீரனிலும் இந்தக் காட்சிகள் வெளியான போது எப்படி உணர்ந்தீர்கள் ?
இந்தக் காட்சி வெளியான போது, நான் கேரளாவில் ஷுட்டிங்கில் இருந்தேன். முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. நான் சம்பந்தப் பட்டதாக சித்தரித்து வெளியிடும் காட்சியை என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் எப்படி வெளியிடுவார்கள் என்ற அதிர்ச்சி தான் மேலோங்கியது. நம்பர் ஒன் சேனல் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சேனலில் இப்படிப் பட்ட ஒரு காட்சியை எப்படி ஒளிபரப்புவார்கள், அதுவும், சம்பந்தப் பட்ட நபர்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலா ஒளிபரப்புவார்கள் என்று முதலில் நம்பவவே முடியவில்லை.
pic12
நான் சினிமாவில் ஹீரோயினாக இருந்த காலத்திலேயே பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காத காரணத்தால் இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. உடனடியாக எனக்கு மனதில் தோன்றியது, சென்னைக்கு திரும்பி, என்னுடைய தரப்பை சொல்லி, பொது மக்களிடம் இது உண்மையல்ல என்று சொல்லி இதை மறுக்க வேண்டும் என்பதே. ஆனால், என் நண்பர்களும், உறவினர்களும், சென்னைக்கு திரும்பாதே என்று உறுதியாக தடுத்து விட்டார்கள்.
சினிமா நடிகை என்பதால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம் அவள் வாழ்கையை நாசப்படுத்தலாம் என்ற உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. என்னைப் போல எத்தனை பெண்களுக்கு இந்த கொடுமையிலிருந்து வெளியேறி வரும் துணிச்சல் இருக்கும் ? இவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் இப்படிச் செய்தது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இந்த கஷ்டத்திலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது.
இந்த காரணத்தினாலேயே நான் எந்தப் பத்திரிக்கைக்கும் இது வரை பேட்டி அளிக்காமல் இருந்தேன்.
என்னுடைய அடையாளத்தையே அழித்து விட்டார்கள். எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு ஏதாவது உள்ளதா ?
இந்த காட்சிகள் ஒளிரப்பப் படும் முன்பு மிரட்டப் பட்டீர்களா ?
சன் டிவியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப் படும் முன்பு போனில் அழைத்து, நித்யானந்தாவின் மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கப் போவதாகவும், அவரின் திருவண்ணாமலை ஆசிரமத்தில் போதைப்பொருட்களை வைத்து அதை கைப்பற்றப் போவதாகவும், என்னை விபச்சார வழக்கில் கைது செய்யப் போவதாகவும், நித்யானந்தா மீது நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப் போவதாகவும் கூறினார்.
இதையடுத்து என் குடும்பம் மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியது. மிகுந்த அச்சத்திற்கு ஆளானார்கள். நான் உடனடியாக கிளம்பி அமெரிக்கா சென்று விட்டேன்.
அதற்கு முன்பாகவே பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே லெனின் மூலமாக மிரட்டல் தொடங்கியது. நேரடியாக என்னையும், ஆசிரம நிர்வாகிகளையும் லெனின் மிரட்டத் தொடங்கினார். ஏற்கனவே நித்யானந்தா அவர்கள் சொல்லியது போல முதலில் 100 கோடிக்கு தொடங்கிய பேரம் 60 கோடியில் வந்து நின்றது.
நீங்கள் சொல்வது போல, அந்த காட்சிகள் பொய்யாக இருந்தால் நீங்கள் எதற்காக பேரம் பேச வேண்டும் ?
எங்களை மிரட்டிய ஸ்ரீதர் என்ற வழக்கறிஞர் உள்ளிட்ட நபர்கள், அவர்கள் ஒரு மிகப் பெரிய மனிதர் சார்பாகவே பேரம் பேசுவதாக தெரிவித்தனர். அந்தப் பெரிய மனிதர் யாரென்று தெரிந்து கொள்ள விரும்பினோம். அது தெரியாவிட்டால், நாளை இந்த மிரட்டல் தொடர்ந்து நடக்கும் என்றே நினைத்தோம். அந்தப் பெரிய மனிதரை ஆசிரமத்திற்கு வர வைப்பதற்காக மட்டுமே 25 லட்ச ரூபாய் பணம் வாங்கிச் சென்றனர். ஆனால் சொன்னபடி பெரிய மனிதர் வரவில்லை, மார்ச் மாதத்தில் சன் டிவியில் ஒளிபரப்பப் பட்டதுதான் தெரியும்.
உங்கள் மீது தமிழக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டதா ?
என் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை. ஆனால் நித்யானந்தா அவர்கள் மீது சென்னை நகர காவல்துறையால் வழக்கு பதியப்பட்டது. யாரோ சில வழக்கறிஞர்கள், நித்யானந்தா எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டதாக அறிந்தேன்.
அது தவறு என்று நினைக்கிறீர்களா ?
காவல்துறை என்பது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா ? அந்த காட்சிகள் ஒளிபரப்பான போது, இது போன்ற காட்சிகளை ஒளிபரப்பியது தவறு என்று சென்னையைச் சேர்ந்த கல்யாணி என்ற வழக்கறிஞர் சென்னை நகர காவல்துறையிடம் சன் டிவி மீதும், நக்கீரன் மீதும், தினகரன் மற்றும் தமிழ் முரசு மீதும் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லையே ? நித்யானந்தா மீது நான் எந்தப் புகாரும் கொடுக்காத நிலையில் எதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படி நியாயமாக நடந்து கொள்ளும் காவல்துறையாக இருந்திருந்தால், வழக்கறிஞர் கல்யாணி மீதான புகாரின் மீதும் அல்லவா வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் ?
தமிழ்நாட்டுக்கு வந்தால் கைது செய்யப் படுவேன் என்று அப்போது செய்திகள் பரப்பப் பட்டன. இது போன்ற கீழ்த்தரமான காட்சிகளை ஒளிபரப்பி அச்சில் ஏற்றிய பத்திரிக்கைகளை கைது செய்யாமல், இதனால் பாதிக்கப் பட்டுள்ள என்னை கைது செய்வேன் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு உண்மையில் இந்நாட்டில் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகமே எனக்கு ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகளைப் பற்றி என்ன நினைத்தீர்கள் ?
எனக்கு ஏற்பட்ட அவமானமும் துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் நேரக் கூடாது. என்னுடைய வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு கட்டாயப்படுத்தவும் முடியாது. எனக்கு ஏற்பட்ட இந்த அநீதி களையப்படுவதற்காகவாவது ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறே நடந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
இந்தச் சிக்கலில் இருந்து எப்படி வெளிவந்தீர்கள் ?
எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. பகவத் கீதையும் ஆன்மீகமும் எனக்கு இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற தைரியத்தை வழங்கியது. இதற்கு உரிய தண்டனை சம்பந்தப் பட்டவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் நம்பினேன்.
நக்கீரன் பத்திரிக்கையை சார்பாகவும் மிரட்டப் பட்டீர்களா ?
நக்கீரன் சார்பாகவும் ஒருவர் என்னை நேரடியாக மிரட்டினார். பணம் கொடுத்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டப் பட்டேன். நக்கீரன் இதழில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆசிரமத்தில் ஒரு நாய் இறந்துவிட்டது என்றும், அதை என்னுடைய கணவரோடு தொடர்பு படுத்தி, என் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டனர். இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் சம்பந்தப் படாத என் கணவரின் புகைப்படத்தை வெளியிடுவது எந்த வகையில் நியாயம். துளி கூட எந்த வகையிலும் சம்பந்தப் படாத என் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டதால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இவர்கள் தானே பொறுப்பு.
என் தொடர்பாகவும், நித்யானந்தா தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்ட காமராஜ் என்பவர், தினகரன் நாளிதழ் எரிப்பு தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் மார்ஃபிங் செய்வது நக்கீரன் பத்திரிக்கைக்கு வழக்கமே என்றும், பெண் உடலில் ஆண் தலையைப் பொறுத்தி உண்மை போல செய்திகளை வெளியிட்டிருக்கிறோம் என்றும், தினகரன் சம்பவம் தொடர்பாக அட்டைப் படத்தில் வெளியான புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப் பட்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சாட்சியம் அளித்திருக்கிறார். இப்படிப் பட்ட பத்திரிக்கையை நடத்தும் ஒரு நபர், என்னைப் பற்றி கேள்வி எழுப்பி செய்திகள் வெளியிடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?
அந்தக் காமராஜ் என்வரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய போது, நீரா ராடியா என்பவர் நடத்தும் ஒரு நிறுவனத்தில் அவர் மனைவி ஜெயசுதா வேலை பார்ப்பதாக செய்தி வெளியிட்டதற்காக மான நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிந்தேன். வேலை பார்க்காத ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாக வந்த செய்தி மான நஷ்டம் ஏற்படுத்தினால், எனக்கு ஏற்பட்ட மான நஷ்டத்திற்கு ஈடு உண்டா ? தன் மனைவியைப் பற்றி வந்த செய்தியால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை போல பல மடங்கு எனக்கு ஏற்படும், ஏற்பட்டிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டாமா ? தன் மனைவியைப் போலத்தான் ஊரில் உள்ள மற்ற பெண்களும் என்று நினைத்தால், இது போன்ற செய்திகளை வெளியிட மாட்டார்கள்.
இது தவிர வேறு யாரும் மிரட்டினார்களா ?
இந்தக் கட்சிகள் ஒளிபரப்பான பிறகு, இவற்றை நியாயப் படுத்துவதற்காக, ஒவ்வொரு ஊரிலும், நித்யானந்தா ஆசிரமத்திற்கு எதிராக பொது மக்களே போராட்டம் நடத்துவதாக சன் டிவியைச் சேர்ந்தவர்கள் அவர்களே போராட்டங்களை உருவாக்கி நடத்தினார்கள். என்னுடைய நண்பர்கள் கூட தாக்கப் படுவோம் என்று அஞ்சினார்கள். அவர்கள் விரும்பாததால் பலரின் பெயரைக் கூட நான் இப்போது குறிப்பிட இயலாது. அந்தச் செய்தியை திரித்து, திரித்து தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக சன் டிவி மற்றும் நக்கீரன் வெளியிட்டு வந்தார்கள். இப்படி எட்டு மாதங்களாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதிலேயே இவர்களின் உள்நோக்கம் எனக்கு நன்கு புரிந்தது.
அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?
நான் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த புதிய அரசின் நிர்வாகத்தின் கீழ் நியாயம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த தைரியத்தின் அடிப்படையில் தான் நான் புகார் அளித்தேன். நான் எனக்காக மட்டும் இந்தப் புகாரை அளிக்கவில்லை. எனக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆனால், எனக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு காரணமானவர்கள், தண்டிக்கப் பட்டால் தான், இது போல மற்ற பெண்களை தவறாகச் சித்தரித்து, அதன் அடிப்படையில் இழிவான வியாபார லாபம் தேடும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள். எனக்கு ஏற்பட்ட இந்த அவமானமும் துன்பமும், வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்று நினைக்கிறேன். என் விவகாரம் மூலமாக இது போன்ற அநியாயங்கள் என்றுமே அரங்கேறக் கூடாது என்றும் நினைக்கிறேன்.
பேட்டியை முடித்து வெளி வரும் போது, ஒரு உறுதியான ரஞ்சிதாவை பார்க்க முடிந்தது.
Thanks to SAVUKKU